சென்னை:  சென்னை  சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு  ரூ. ரூ.27¾ கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், சைதாப்பேட்டையில் 27 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில்,முதல் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு தகவல் ஆணையம் என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ், அம்மாவின் அரசால் 7.10.2005ல் அமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான தன்னாட்சி அமைப்பாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வமைப்பானது வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகிறது.

முதலமைச்சர் கடந்த 9.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி, சென்னை, சைதாப்பேட்டையில், மாநில தகவல் ஆணையத்திற்கு, விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மனுதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திட தரைத்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், சைதாப்பேட்டையில், 1 ஏக்கர் நிலப்பரப்பில், 7924.84 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில் தரை மற்றும் 5 தளங்களுடன், 27 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையக் கட்டடத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய தமிழ்நாடு தகவல் ஆணையக் கட்டடம், மேல்முறையீட்டு விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அலுவலக அறைகள், அலுவலர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளி களுக்கான சாய்தள வசதி, கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முடிவுற்ற திட்டப்பணிகள்; அண்ணா நகர், தி.நகர், பெசன்ட்நகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம்,சென்னை மாநகர பகுதி வீடுகளுக்கு இல்லந்தோறும் இணைப்பு திட்டம், மழை அளவுமானி உள்ளிட்ட பலவற்றை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வேலூர், திருச்சி, தஞ்சை, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 5503 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் எஸ். ஸ்வர்ணா, மாநில தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபால், (ஓய்வு), மாநில தகவல் ஆணையர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.