சென்னை: பூக்கடை பகுதியில் உள்ள சுராணா ஜூவல்லர்ஸ்  நிறுவத்துக்கு சொந்தமான  இடங்களில் அமலாக்கத்துறையினர்  இன்று சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை பூக்கடை அருகே உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுராணா நிறுவனத்தில்  சட்டவிரோதமாக தங்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தது தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது, நூற்றுக்கணக்கான கிலோ தங்க பிஸ்கட்டுகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  அவைகள் மொத்தம்  400.47 கிலோ என கூறப்பட்டது. அவை அனைத்தும்,  சுராணா நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைத்து பூட்டப்பட்டு, சிபிஐ முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டது.

லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அந்தப் பாதுகாப்புப் பெட்டகங்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததற்கான ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டா்டு சாா்ட்டா்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற கடன் தொகையான ரூ. 1,160 கோடியை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுரானா நிறுவனத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை போட்டு பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது.  400.47 கிலோ  அளவிலான தங்கம் வைக்கப்பட்ட நிலையில், அதில், 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

சிபிஐயை சுமார் 103 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. இந்த தங்கமானது திருடு போனது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுராணா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள், தடவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 103கிலோ தங்கம் காணாமல் போன விவகாரத்தில் சுராணாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐயிடம் இருந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.