டெல்லி: கேரள பாதிரியாருக்கு சொந்தமான 66 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கணக்கில் வராத ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. மேலும் போலியாக அறக்கட்டளை என்ற பெயரில் நிதி மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவல்லாவை தளமாகக் கொண்ட பிலிவர்ஸ் சர்ச் குழுவுக்கு கேரள மட்டுமின்றி தமிழகம், மேற்குவங்காளம், கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களிலும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்வதாக எழுந்தபுகார்களைத் தொடர்ந்து வருமான வரித்துறை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தியது.

இதையடுத்து பிலிவர்ஸ் சர்ச் குழுவுக்கு சொந்தமான   66 இடங்களில் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 கட்டுக்கள் கிடைத்ததாகவும்,  சுமார் 8 கோடி ரூபாய் வரி மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன்   ரூ .6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் ஏழைகளுக்காக பெறப்பட்ட வரி விலக்கு அளிக்கப்பட்ட நிதிகள் மற்றும் நன்கொடைகளைக் கொண்டு முறைகேடாக பல இடங்களில்  ரியல் எஸ்டேட் மற்றும் தனிப்பட்ட முதலீடுகளுக்களுக்கு உபயோகப்படுத்தி  வணிக நோக்கில் செயல்பட்டு வந்தததாகவும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. போலியான பெயரில் அறக்கட்டளை உருவாக்கி தில்லுமுல்லு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பிலிவர்ஸ் சர்ச் குழு சார்பில்,  நாட்டின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், கேரளாவில் ஒரு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. மேலும் 30 அறக்கட்டளைகளையும் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.