ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீதான குற்றச்சாட்டுகளை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம், ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது.

ரஞ்சித் சிங்கைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதற்காக 2021 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்துடன் குர்மீத் ராம் ரஹீமுக்கு ரூ.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், குர்மீத் ராம் ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

குற்றவாளிகள் அனைவருக்கும் IPCயின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ராம் ரஹீம் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து அவரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இன்று விடுவித்தது.

ஏற்கனவே, பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்ததற்காக 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு தேரா தலைவர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தனது சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ராம் ரஹீம் சிங் தற்போது ரோஹ்தக்ஸ் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ராம் ரஹீமுக்கு 50 நாள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான ஹரியானா அரசு ராம் ரஹீமுக்கு தொடர்ந்து பரோல் வழங்கிவருவதாக விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.