அசாம் மாநிலம் கவுகாத்தியில் நிலத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கவுகாத்தியின் அமைங்காவ்ன் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகளுக்கு இடையிலான எல்லைத் தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு மைனர் பெண் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக ஜோனாலி ஹசாரிகா கலிதா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று அண்டை வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் பஞ்சாயத்து செய்து சண்டையை நிறுத்தினர்.

இதுதொடர்பாக இருதரப்பும் பேசி தீர்த்துக்கொள்ள அவர்கள் அறிவுறுத்திய நிலையில் மறுநாள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பக்கத்து வீட்டுக்குள் ஒரு கிண்ணத்தில் சூடான எண்ணெயுடன் நுழைந்த ஜோனாலி யாரும் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது ஊற்றினார்.

இதில் படுகாயமடைந்த ஐந்து பேர் உடனடியாக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (ஜிஎம்சிஎச்) கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஜோனாலி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.