தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியில், மும்பை மற்றும் புனே நகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிரபல மருத்துவமனைகள் ஆயுஷ் எனப்படும் அலோபதி அல்லாத பிற மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்துவர்களை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது.

இவர்கள் இரவு நேரப் பணி, ஐசியூ மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் தேவை குறித்து பிரபல ஜாப் சைட்டுகளில் ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலுண்ட், ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் மும்பையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனை மற்றும் புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மற்றும் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை ஆகியவை விளம்பரம் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில் இந்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களுக்கு உதவியாக ரெக்கார்டுகளை பராமரிக்க நியமிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

அதேவேளையில், வேலை தொடர்பாக ஆயுஷ் மருத்துவர் என்ற பெயரில் பேசிய நிருபரிடம், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவது தொடர்பான இந்த செய்தி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அலோபதி மருத்துவர்கள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் ஒரு சில மருத்துவர்கள் ஆயுஷ் உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் மருத்துவம் படித்தவர்களை அலோபதி மருத்துவமனைகளில் பணியமர்த்துவது என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.