கோவை:

கோவை அருகே உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 19ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில், அங்கு  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.98 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதியில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதுபோல தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன.

கோவை சூலூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் செய்யப்பட்டது. சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக வரைகலை அதிகாரி ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படையைச் சேர்ந்த அதிகாரிகள் சூலூர் அருகே சோளக்காட்டுப் பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வேனை நிறுத்தி சோதனை போட்டபோது, அதில் 1கோடியே 98 லட்சத்து 6ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்,  உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால் அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.