டில்லி

சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நடந்த உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் வருடம் மாமிச ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை நேரத்தில் முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கடந்த வருடம் வழக்குப்பதியப்பட்டது.   வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இந்த விசாரணையை சிபிஐ முடிக்க உள்ள நேரத்தில் இந்த விசாரணையில் பெரும் பகுதி முடிவடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த லஞ்ச வழங்கலில் இடைத் தரகராகச் செயல்பட்ட மனோஜ் பிரசாத்தின் மாமனார் சுனில் மிட்டல், மற்றும் மனோஜ் பிரசாத்தின் சகோதரர் சோமேஷ்வர் ஸ்ரீவத்சா, வழக்கில் சாட்சியான புனித் கர்பந்தா  ஆகியோரிடம் கடந்த மார்ச் 7, 8, 12. 13 மற்றும் ஏப்ரல்  5 தேதிகளில் உண்மை கண்டறியும் சோதனை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின.   இந்த சோதனை முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் சிபிஐ பெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த சோதனையில் ராகேஷ் அஸ்தானா மீது சுமத்தப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் உண்மை எனத் தெரிய வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து ராகேஷ் அஸ்தானாவின் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, “எனக்குத் தெரிந்து இத்தகைய சோதனை எப்போதும் நடக்கவில்லை.  வழக்கு விசாரணையில் எந்த ஒரு கட்டத்திலும் இதைப் பற்றிச் சொல்லப்படவில்லை.  சிபிஐ சார்பில் இது குறித்த அறிக்கை எதுவும் அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  ஆனால் எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது” என கூறி உள்ளார்.