டெல்லி:

டியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்று வந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக,  கடந்த ஜூலை மாதம், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்  17பேர் தங்களது பதவிகளை  ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்து,  எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

இதற்கிடையில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்களை கட்சி கொறடாக்களின் உத்தரவின்பேரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உள்பட 15 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார்  தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், அங்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்தது. அதன் காரணமாக, அங்குதேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. தேதி மாற்றக்கோரி கோரிக்கை எழுந்த நிலையில், இடைத்தேர்தல் தேதி மாற்றிய  தேர்தல் ஆணையம் டிசம்பர் 5ந்தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரும் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியானது. பாஜக தலைமையும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக உறுதி கூறியிருந்தது. இதனால், தங்களது தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவிக்காத உச்சநீதி மன்றம், இடைத்தேர்தலை தள்ளி வைக்க மறுத்து விட்டது.

கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்எல்ஏக்களும் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.