டில்லி

நாட்டின் வருவாயில் பெரும் பங்கு கடனை திருப்பி செலுத்துவதில் செலவழிக்கப்படுவதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதிச் செயலராக பணிபுரிந்த சுபாஷ் சந்திர கர்க் மின்சார செயலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார்.   பதவி வாரியாக இர்னடும் ஒன்றாக இருந்த போதிலும் மின்சார செயலர் பதவிக்கு அதிகாரம் குறைவு என்பதால் அந்த பதவியை ஏற்க மறுத்து அவர் விருப்ப ஓய்வில் பதவி விலகினார்.  பொருளாதார நிபுணரான கர்க் ஒரு 72 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  அதில் இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பல விளக்கங்களை அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் இந்தியப் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு மேம்பாடு குறித்து 100 யோசனைகளை அளித்துள்ளார்.  இந்த அறிக்கையின் ஒரு நகலை அவர் அரசின் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இவருடைய பதவிக் காலத்தில் அரசு அளித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஜிடிபி 3.4% இருப்பதாகத் தெரிவித்த போது அதை 3.3% மட்டுமே உள்ளதாக தெரிவித்திருந்தார்.

சுபாஷ் சந்திர கர்க், “அரசுக்கு தற்போது உள்ள கடன் சுமையானது வரவை வெகுவாக பாதிக்கிறது.   அரசின் வருமானத்தில் பெரும்பங்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதால் பொருளாதாரத்தில் பெரும் தடை உண்டாகிறது.   அரசு வங்கிகளின் வ்ருமானத் தொகையில் இருந்து அரசுக்கு கிடைக்கும் பங்கை ஒரு நிதி நிறுவனத்துக்கு மாற்றி அதைக் கொண்டு கூட்டுறவு வங்கிகளின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.

நிதிநிலை மீதான கடன், உணவு மானியம், உர மானியம் ஆகியவற்றுக்கு வங்கிக் கடனை பயன்படுத்துவது, ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.   வங்கி மூலம் கிடைக்கும் வருமானத்தில் அமைக்கப்படும் நிதியை இவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும்.

நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் நிலம், கட்டிடம் போன்றவற்றை நில மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.   அதிகமாக உள்ள நிலங்களைத் தனியார் வசமாக்கி அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நஷ்டமடையும் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.