உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024 ம் ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று ட்ரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதய ஆண்டு வருமானம் மற்றும் அவர்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி சதவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியுள்ள இந்த நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்க முதலீட்டாளர் எலோன் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று கணித்துள்ளது.

அதேபோல், இந்தியாவின் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2025 ம் ஆண்டு 1 ட்ரில்லியன் டாலரைத் தொடும் என்றும் ட்ரில்லியன் டாலரை தொடும் இரண்டாவது நபராக இருப்பார் என்றும் கூறியுள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவன தலைவர் ஷாங் இமிங் 2026 ம் ஆண்டு இந்த நிலையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் 30 முன்னணி பணக்காரர்களில் 21 பேருக்கு தங்கள் வாழ்நாளில் ட்ரில்லியனராகும் வாய்ப்பு உள்ளதாக அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 2029 ம் ஆண்டு இடம் கிடைக்கும் என்றும், அமேசான் நிறுவனம் ஜெப் பைசாசுக்கு 2030 ம் ஆண்டும் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனர் லார்ரி பேஜ் (2032), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் (2032) பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பேர்க் (2034) ஆரக்கிள் தலைமை செயல் அதிகாரி லார்ரி எலிசன் (2036) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2044 ல் ட்ரில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள்.