திருச்சூர்

பிரிட்டானியா நிறுவன பிஸ்கட் பாக்கெட் எடை குறைவாக இருந்ததால் ரூ.60000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருசூரைச் சார்ந்த ஜார்ஜ் தட்டில் என்கிற நபர் அவரது வீட்டருகே உள்ள சுக்கிரி ராயல் பேக்கரியில் இரண்டு பிரிட்டாணிய நிறுவனத்தில் நியூட்ரி சாய்ஸ் தின் ஆரோ ரூட்ஸ் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். தலா ரூ. 40 விலையில் 300 கிராம் எடையுள்ள இந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

அவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் எடையை பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள எடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டு பாக்கெட்டுகளும் வெவ்வேறு எடை கொண்டதாக இருந்தது. அதாவது 300 கி இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகள் ஒன்று  268 கி மற்றும்  248 கி என இருந்ததால் இதனை புகாராக அளித்து வழக்கு தொடர முன்வந்தார்.

ஜார்ஜ் திருச்சூர் லீகல் மெட்ராலஜியின் பறக்கும் படையின் உதவிக் கட்டுப்பாட்டாளரிடம் ஜார்ஜ் புகார் அளித்தார், அவர் திருச்சூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை (மாவட்ட ஆணையம்) அணுகி நுகர்வோர் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட நிதி, உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு இழப்பீடு கோரினார்.

பிரிட்டானியா நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட பேக்கரி ஆகிய இரண்டும் நோட்டீஸ் வழங்கிய பின்னரும் மாவட்ட ஆணையத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யத் தவறியதை அடுத்து அதனை நுகர்வோர் நீதிமன்றம் கண்டித்தது.

உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரின் செயல்களும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சட்ட அளவியல் சட்டம் 2009 இன் பிரிவு 30 (நிலையான எடை அல்லது அளவை மீறும் பரிவர்த்தனைக்கான அபராதம்) ஆகியவற்றை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஆகவே, புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் அவர் தொடுத்த வழக்குச் செலவுக்காக ரூ. 10,000 தொகையை எதிர்தரப்பு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.