ஸ்ரீநகர்: வேளாண் சட்டத்தைப்போல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என  காஷ்மீர் மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்திய வந்த நிலையில், அதை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 19ந்தேதி) அறிவித்தார். இதற்கு வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் தோல்வி மற்றும் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள உ.பி. , பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபையில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் பாஜக அரசு வாபஸ் வாங்கி உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி  கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஹபூபா முப்தி, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ. அரசு, ஜம்மு – காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. இங்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.