அமராவதி: நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலத்தை புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி மூழ்கியது. மேலும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி காணாமல் போன 30 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை உள்பட பல மாவட்டங்களை மிரட்டியது கொட்டித்தீர்த்த மழை காரணமாக பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இறுதியில் சென்னை அருகே கரையை கடந்து ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. அத்துடன் மேலும் ஒரு காற்றதழுத்த தாழ்வு பகுதி உருவானதால் ஆந்திராவில் மழை கொட்டி வருகிறது.

ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதி உள்பட  சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது.  விடாது பெய்யும் கனமழையால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

செய்யாறு ஓடை நிரம்பியதால் நந்தலூர், ராஜாம்பேட்டை மற்றும் பிற பகுதிகளைச் சுற்றியுள்ள குண்டலூர், சேஷமாம்பாபுரம், மண்பள்ளே உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த வழித்தடங்கள் வாயிலாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. பேருந்தில் இருந்தவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

ராஜம்பேட்டை-நந்தலூர் வழியாக சென்ற இரண்டு பேருந்துகள் பாதியளவு வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், ஒரு பேருந்து முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டது.

இந்த மழை வெள்ளத்துக்கு 17 பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் 30 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.