கவுதமியின் பூர்வீகம் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம். பொறியியல் படித்தவர்.
இவர் முதலில் அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான். குருசிஷ்யன் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
1998ல் கவுதமி, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையைவிட்டு விலகினார். அடுத்தவருடம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் சுப்புலட்சுமி.
குழந்தை பிறந்த சில மாதங்களில் தனது கணவர் சந்தீப் பாட்டியாவை விவாகரத்து செய்தார் கவுதமி. அதன் பிறகு தனித்து வாழ்ந்தார்.
இந்த நிலையில் கமலுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இதையடுத்து 2005 முதல் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
ஏற்கெனவே, பல வருடங்களுக்கு முன்பு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் – கவுதமி ஜோடியாக நடித்தனர். அதில், இருவரும் ஆடிப்பாடிய “வாழவைககும் காதலுக்கு ஜே..” என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.
திருமணம் என்ற பந்தத்துக்குள் ஆட்படாமல், காதலுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அந்த உறவு 13 வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2014ம் ஆண்டு “பாபநாசம்” படத்தில் ஜோடியாக நடித்தனர். அதுவே அவர்கள் சேர்ந்து நடித்த கடைசி படம் என்று ஆகவிட்டது, சோகம்தான்.