சென்னை: 85 வயதான பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல படத்தயாரிப்பாளர் ஜி.வி.பிலிம்ஸ் ஜி.வெங்கடேஷ்வரன் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கே.ராஜன் தற்கொலை செய்துகொண்டுள்ளது தமிழ்நாடு திரைப்பட உலக அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ்நாட்டின்  முன்னணி நட்சத்திரங்கள் பல நூறு கோடி ரூபாய்களை சம்பளமாக வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்கள் உலகத்தையே அழித்து வருவதாய் பரபரப்பாக பேசி வந்தவர். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் டாப் ஸ்டார் ஆக இருந்த போதிலும், அன்றைய காலகட்டத்தில் சிறிய தயாரிப்பாளர்களையும் எப்படியெல்லாம் ஊக்குவித்தார்கள் என்பதை திரைப்பட மேடைகள் தோறும் விவரித்து வந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.ராஜன் மறைவு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய   மற்றொரு தயாரிப்பாளரான ஏ.எல்.அழகப்பன் கூறுகையில், மிகவும் நல்ல மனிதர், அவர் தைரியமானவர். மனதில் தோன்றியதை பட்டென பேசக் கூடியவர். விளம்பர பிரியர். தன்னை பற்றிய செய்தி பேப்பரில் வர வேண்டும் என நினைப்பார். எப்போதுமே துடுக்காகவே பேசுவார். இதனால் அவர் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தார். மேலும் பலருக்கு நன்மைகளை செய்துள்ளார். இன்றும் அவரால் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவரது குடும்பத்தில் சில பிரச்சனை காரணமாக ஓராண்டாக அவர் தனியே ஹோட்டலில் தங்கியுள்ளார். அவருக்கு உணவு மகள் வீட்டில் இருந்து வருவதாக தெரிவித்தார். அவருக்கு காசு பணத்திற்கு எந்த குறைவும் இல்லை. ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

கடந்த வாரம் தயாரிப்பாளர் சவுத்ரி ஒரு விபத்தில் சிக்கி இறந்தார். அது போன்ற ஒரு மரணம் என்றால் நம்மால் ஏதோ ஜீரணிக்க முடியும். ஆனால் கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது என்பது மனதிற்கு வருத்தத்தை கொடுக்கிறது. இவ்வாறு அழகப்பன் தெரிவித்தார்.

எனவே கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டது குடும்ப பிரச்சினை காரணமா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[youtube-feed feed=1]