நினைவலைகள்: கமல் முதல் மனைவி வாணி கணபதி கடந்த வருடம் அளித்த பேட்டி

கமல் - வாணி கணபதி
கமல் – வாணி கணபதி

மல் ஹாஸனின் முதல் மனைவி வாணி கணபதி. 1978-ம் வருடம் இவர்களது திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்படவே, பத்தாண்டுகால இல்லற வாழ்க்கை 1988ம் வருடம் முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் இந்தி நடிகை சரிகாவுடன், கமல் நெருங்கிப் பழகினார். இருவரும் ஒரே வீட்டில் வசித்தனர். முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்தார். அடுத்து இரண்டாவது மகள் அக்ஷரா பிறந்த பிறகு கமல் – சரிகா முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் கமலும், நடிகை கவுதமியும் சேர்ந்து வாழத்துவங்கினர். கவுதமிக்கு திருமணமாகி மகள் இருக்கிறார். தனது கணவரை விவாகரத்து செய்த கவுதமி, கமலுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
அவர்களது 13 வருட பந்தம், முடிவுக்கு வந்ததாக இன்று கவுதமி அறிவித்துள்ளார்.
வாணி - கமல் ( திருமணமான புதிதில்)
வாணி – கமல் ( திருமணமான புதிதில்)

இந்த நிலையில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி கடந்த ஆண்டு  மீடியாவுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், “எனது முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்தபோது, அவருக்கு நிறைய பணம் ஜீவனாம்சமாக தரவேண்டியிருந்தது. அதனால் பொருளாதார பாதிப்புக்கு ஆளானேன். சொந்த வீடு கூட இல்லாத நிலை” என்று பேட்டி அளித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் ஜூலை மாதம், மீடியாவுக்கு பேட்டி அளித்த வாணி கணபதி, தனது உள்ளக் குமுறல்களைக் கொட்டித்தீர்த்தார். அதற்கு முன்புவரை, கமல் குறித்து வாணிகணபதி பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பேட்டியில் வாணி கணபதி தெரிவித்திருந்ததாவது:
“இந்தியாவில் விவாகரத்துக்காக தரப்படும் ஜீவனாம்சத்தால் ஒருவர் திவாலாகிவிடுவாரா? அல்லது விவாகரத்து பெற்ற பெண் வாழ்நாளெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு அந்த ஜீவனாம்சத் தொகைதான் கிடைக்கிறதா? கமல் சொல்வதை  நம்புகிறீர்களா? எந்த இந்திய நீதிமன்றம் பெண்ணுக்கு அந்த அளவு இழப்பீட்டுத் தொகை தரச் சொல்லி உத்தரவிடுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
வாணி ( சமீபத்திய  ஒளிப்படம்)
வாணி ( சமீபத்திய ஒளிப்படம்)

கமல் வாடகை வீட்டில் வசித்ததாகக் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த வாணி, “கமல் எப்போது சொந்த வீட்டில் வசித்திருக்கிறார்? திருமணமாகி நாங்கள் வாழ்ந்த பத்தாண்டுகளில் வாடகை வீட்டில்தான் வசித்தோம். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் சில காலம் இருந்தோம்.  கமல் எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர். எனக்குத் தெரிந்து அவர் ஒருபோதும் திவாலாகிவிடவில்லை.  அவரிடம் போதிய பணம் இருந்தது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் அதற்கு நான் காரணமல்ல. வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.
“இதுகுறித்து கமலுடன் பேசினீர்களா?” என்ற கேள்விக்கு, “இல்லை.. நான் அவருடன் பேசுவதில்லை. கமலுடன் நான் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்றார்.
மேலும், “கமலின் திறமையை நான் மதிக்கிறேன். ஆனால் திறமைசாலி என்பதற்காக போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் பழி போடுவதை அனுமதிக்க முடியாது. மகள்களிடமிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ அனுதாபம் பெற அவர் நினைத்தால், யார் பெயரையும் பயன்படுத்தாமல் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும்” என்று காட்டமாகத் தெரிவித்தார் வாணி.