மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ :   காரணம் என்ன?

Must read

துரை:

துரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில்   கூரை இடிந்தது.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் பாதையில்  வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன.

 

இந்த நிலையில் வழக்கம்போல், கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சுமார் 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்தனர். உடனே அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல்  அளித்தனர். . மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால்,தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஐந்துக்கும்  மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்களுடன், கோவில் ஊழியர்களும் சேர்ந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

 

இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலானது. மேலும், அப்பகுதியில் இருந்து நேற்று காலையிலும் புகை வந்து கொண்டே இருந்தது. தீ அணைக்கப்பட்டதால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. ஆனால் அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்து விழுந்தன. மண்டபம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், சுந்தரேசுவரரையும், மீனாட்சி அம்மனையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட பிறகு, ஆட்சியர்  வீரராகவராவ், “ தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையும், மேற்பரப்பில் குறுக்காக இருந்த சில கல் உத்திரங்களும் இடிந்து விழுந்துள்ளன. நான்கு சிறப்பு பொறியாளர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு மண்டப பகுதியில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட இருக்கிறது.  ஆயிரங்கால் மண்டபத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சுமார் ஏழு ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். . இந்த மண்டபம் திருமலை நாயக்கரின் சகோதரர் முத்துவீரப்ப நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

 

விபத்து காரணமாக நேற்று காலை கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இது குறித்து கோவில் பட்டர் செந்தில், “  தீ விபத்து காரணமாக ஆட்சிக்கோ, கோவிலுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை. ஆகவே யாரும் பீதி அடைய வேண்டாம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதற்கிடையே கோவிலுக்கு வெளியே இந்து முன்னணி, பா.ஜ.க., பக்தர்கள் பாதுகாப்பு பேரவையினர் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

ஆயிரங்கால் மண்டபம் பகுதி அருகே உள்ள ஒரு கடைக்கு பின்னால் மின்சார பெட்டி உள்ளது. சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற போது,   அந்த மின்சார பெட்டியில் இருந்து தீ கசிவு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

 

வெள்ளிக்கிழமை தோறும் கடைக்காரர்கள் திருஷ்டிக்காக கடை முன்பு கற்பூரம் ஏற்றுவது வழக்கம். அதனை அணைக்காமல் சென்று அதில் இருந்து தீப்பொறி பறந்து கடையில் பற்றி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

கடையில் மின் விளக்கை அணைக்காமல் சென்றிருந்தால் கூட விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என காவல்துறையினர்  கூறினர்.

 

திடீர் தீ விபத்து ஏற்பட்டபோது, புறாக்கள் மீதும் தீப்பிடித்து அந்த புறாக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அருகில் இருந்த கடைகளுக்கு பறந்து சென்ற போது தீ பரவி இருக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

More articles

Latest article