கோவை:

வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணன் சரிமாரியாக வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி தம்பதியினர். கூலித்தொழில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத், கனகராஜ், கார்த்திக்  என 3 மகன்கள் உள்ளனர். இவர்களும் கூலி வேலையே செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கனகராஜ் என்பவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், பிரச்சினை ஏற்படும் என கருதி, கருப்பசாமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கனகராஜின் காதலி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  திடீரென அவரது வீட்டில் இருந்து வெளியேறி கனகராஜ் வீட்டில் தஞ்சமடைந்தார். அவரை, கனகராஜ் குடும்பத்தினர் புத்திமதி கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கனகராஜின் காதலி கடந்த 3 நாட்களுக்கு முன்பு  மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்தார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் பிரச்சினை எழுந்ததது.. இதையடுத்து, கனகராஜ், தனது காதலியை அழைத்துக்கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கினார். இது கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று பிற்பகல்  கனகராஜ் அண்ணன் வினோத், கனகராஜ் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை திருப்பி அனுப்பி வைக்குமாறு பேசியுள்ளார். அப்போது அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம்  அடைந்த வினோத் தான் வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார்.

காதலன் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கனகராஜ் காதலிக்கும் வெட்டு விழுந்தது. இந்த நிலையில்,  தலையில் படுகாயம் அடைந்த கனகராஜ்  துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத்  தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வினோத் உடலை பிரேத பரிசோதனைக்கும், அவரது காதலியை சிகிச்சைகாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். கொலையாளி வினோத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில், வினோத் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. வேறு ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணனே ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வினோத் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற ஆணவக்கொலைகள் நிகழாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கோவையில் தம்பியை அண்ணனே கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.