சென்னை:

நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமை என்று  டிடிவியை கடுமையாக சாடி உள்ளார், அவரது வலதுகரமான தங்கத்தமிழ் செல்வன்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியை சேர்ந்த பலர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். மேலும் சிலர் திமுக உள்பட மாற்றுக்கட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘டிடிவியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த அதிரடி அரசியல்வாதி தங்கத்தமிழ் செல்வனுக்கும் டிவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக கட்சி நிர்வாகியிடம் தங்கத்தமிழ்செல்வன், டிடிவி தினகரனை  ‘பொட்டப்பய’ கடுமையான வார்த்தை களால் வசை பாடிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தங்கத்தமிழ்செல்வன்  வருத்தம் தெரிவிக்க மறுத்த நிலையில், டிடிவி தினகரன், தங்கத்தமிழ்செல்வன் தன்னை கண்டால்  பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார், அவரை விரைவில் கட்சியில் இருந்து நீக்குவேன், எனக்கு அறிவுரை சொல்ல அவர் யார் என கடுமையாக எகிறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தங்கத்தமிழ் செல்வன்,    என்னை யாரோ இயக்குவதாக டிடிவி தினகரன் கூறுகிறார், அப்படி என்னை யாரும் இயக்கவில்லை. தினகரன் சொல்வது போல் எஸ் பி வேலுமணியோ தங்கமணியோ என்னை இயக்கவில்லை.

கட்சி குறித்து விமர்சனங்கள் வைக்கத்தான் செய்வேன். விமர்சனங்களை தாங்கிக் கொண்டு தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும். பெட்டிப் பாம்பாக அடங்க மாட்டேன். தினகரனிடம் பெட்டிப் பாம்பாக அடங்க அவர் என்ன எனக்கு சோறா போடுகிறார் என்றவர், எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான்.

ஊடகங்களில் விமர்சகராக வருவேன் என தங்கதமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார். தினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல நான் அமைதியாக இருப்பேன், என்னை குறித்து பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங்களை பேசுவேன், கட்சியில் நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமையாக கூட இருக்கலாம்  என்று தெரிவித்தவர்,  நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. அதற்கு நான் செய்ய முடியும்.

இவ்வாறு தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.