மதுரை:

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதி மன்றம், இனி வருங்காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என்று அறிவுரை கூறி முன்ஜாமின் வழங்கி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நிகர்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜசோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக  பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி பா.ரஞ்சித், உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு ராஜராஜசோழன் குறித்து விமர்சனம் செய்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், ரஞ்சித் மீதான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, இனி வருங்காலங்களில் சர்ச்சைக் குரிய வகையில் பேச கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.