சென்னை:

டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

டிடிவி தினகரன் மீது, அவரது வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்கத்தமிழ்செல்வன், டிடிவி தினகரனை பொட்டப்பய என்றும் மேலும்  பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய நிலையில்,  எனக்கு அறிவுரை சொல்ல தங்க.தமிழ்ச்செல்வன் யார்? .என்னைப் பார்த்தால் பொட்டி பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் பதிலுக்கு எகிற தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி, அதனால்தான் ஜெயலலிதா அவரை 10 ஆண்டுகள் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தார் என்று கூறினார்.

தற்போது தினகரனின் சுயரூபம் தெரிந்துவிட்டது. அவரின் கட்சி காலாவதியாகி விட்டது என்று கூறியவர்,  சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும், அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறினார்.

மேலும், அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கும் தனியார் லாரிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது தயவு தாட்சனையமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.