சென்னை,
ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார்.
ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் முதல்வர் ஜெயலலிதா ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரேசன் பொருட்கள் வாங்க, தற்போது உள்ள அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதைத் தொடர்ந்து தற்போது இருக்கும் ரேசன் கார்டு தகவல்களுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.
இன்று, சென்னையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், உதவி ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்களுக்கான பொது விநியோகத்திட்ட முழு கணினி மயமாக்கல் குறித்து பயற்சியரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு, பயிற்சியரங்கத்தை தொடங்கி வைத்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் பேசினார்.
அப்போது, பொது விநியோகத்திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்கிட, ஜெயலலிதா 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு (2017) முதல் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.