சென்னை:  தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்று திமுக அரசு தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, முன்கூட்டியே ஆண்டிறுதி தேர்வை நடத்தும் வகையில்,  பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபியது. இதையொட்டி, தேர்வுகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் 4 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை காரணமாக, தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தநிலையில், அதை ஏற்று தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  2023-24ஆம் நிதியாண்டிற்கான இறுதித் தேர்வு நடத்துவது பற்றி ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரமலான் பண்டிகை வருவதால் தேர்வு அட்டவணை யில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

அதன்படி,  4, 5, 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் இரண்டு பாடங்களின் தேர்வு தேதி மாற்றப்படுகிறது.

அறிவியல் தேர்வு ஏப்ரல் 10 புதன் அன்றும், சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 12 வெள்ளி அன்றும் நடைபெறுவதாக இருந்தது. இவற்றை ஏப்ரல் 4 வியாழன் மற்றும் ஏப்ரல் 6 சனி ஆகிய கிழமைகளில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளை பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ளலாம்.

இதற்காக உருது பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கி வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட கல்வி அலுவலர்களின் கடமை.

சரியான வழிகாட்டுதலுடன் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 13 சனி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக இருந்தது தற்போது தேர்வு முன்கூட்டியே அமைக்கப்பட்டுள்ளதால், மேலும் விடுமுறை நாட்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் முதல்வாரத்தில் நடைபெற உள்ளதால், 2வது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.