சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 3 மாநிலங்களில் நடைபெற்ற  சோதனைகளைத் தொடர்ந்து,  குண்டுவெடிப்பு சதிகாரர் ஒருவரை என்ஐஏ  கைது செய்துள்ளது. பெங்களூரின் முஸம்மில் ஷரீப் என்பவர், கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களுருவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான   ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மார்ச் 1ந்தேதி அன்று வெடித்து சிதறியது. இதில், துரதிருஷ்டவமாக  10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பு  வழக்கை   தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)  விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதி, சென்னையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன்,  குண்டு வைத்த குற்றவாளி அணிந்திருந்த தொப்பி, சென்னை மயிலாப்பூரில் பகுதியில் உள்ள ஒரு மாலில் வாங்கப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் குண்டு வைத்த கொடூர செயலில் ஈடபட்டுவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, சென்னை மண்ணடி அருகே முத்தையால்பேட்டையை சேர்ந்த அபுதாஹிர், ராயப்பேட்டை பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த லியாகத் அலி, வண்ணாரப்பேட்டை ரஹீம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத், அவரது தந்தை அன்பு பக்ருதீன் உள்ளிட்டோரின் வீடுகளில்  என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவர்களிடம் இருந்த மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பெங்களுரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது.  இவர்களுக்கும்,   கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்.,23ல், கார் குண்டுவெடிப்பு நடத்தி பலியான ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபினுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

ஜமேஷா முபின் தலைமையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப் பயிற்சி குறித்தும் விவாதித்து உள்ளனர். இவர்களுக்கு தலைவனாக, இலங்கையில், 2019ல், ஈஸ்டர் அன்று தொடர் குண்டுவெடிப்பு நடத்தி, 270 பேரை கொன்ற சஹ்ரான் ஹாசிம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

சஹ்ரான் ஹாசிம் குண்டு வெடிப்பு நடத்தி பலியாவதற்கு முன், சென்னைக்கு பல முறை வந்துள்ளார். அவர் நடத்திய ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் தான், கோவையிலும், பெங்களூரிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மார்ச் 27 அன்று  கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 18 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து,  சென்னையில், முஸம்மில் ஷரீப் என்பவர் கைது செய்யப்பட்டு, துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முசாவிர் ஷசீப் ஹுசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவருக்கும், தற்போது கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டுள்ள முஸம்மில் ஷரீப் ஆதரவு வழங்கினார் என்றும்,  குற்றவாளிகள் மூன்று பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சம்மந்தப்பட்ட இடங்கள் அனைத்திலும்  மார்ச் 28  சோதனை நடத்தப்பட்டது.

விசாரணை அடிப்படையில், முஸவீர் ஷாகிப் ஹுசைன் குண்டுவைத்ததும், அப்துல் மதின் தாஹா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இவர்கள் இருவருக்கும் உதவி செய்ததாக, பெங்களூரின் முஸம்மில் ஷரீப் என்பவர், கைது செய்யப்பட்டு உள்ளார்.  இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் பிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.