டெல்லி:  ரூ. 1,700 கோடியை வரியாக செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான  வரித்துறை அதிகாரிகள் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதிபடுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி வருமான வரித்துறைக்கு எதிராக தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு நாள் கழித்து, வருமான வரித்துறை யிடம் இருந்து காங்கிரஸுக்கு ₹ 1,700 கோடி நோட்டீஸ் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில்,  2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வரி  மற்றும் அபராதம் மற்றும் வட்டி ஆகியவை அடங்கும் என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் சமயத்தில், தேர்தல் செலவுக்கு பணத்தை எடுக்க முடியாத வகையில் மத்திய பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியை முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ரூ.210 கோடி வரி பாக்கி செலுத்தாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கியது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இது மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்றும்,  தேர்தல் செலவுக்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

இதைதொடர்ந்து வருமான வரித்துறை மீண்டும் நோட்டீ1ஸ் அனுப்பி உள்ளது. அதில், 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வரி மற்றும் அபராதம் மற்றும் வட்டி ஆகியவை  தொடர்பாக ரூ.1700 கோடி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில்,  இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்ததில்,  2018-19-ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.520 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை விதித்து நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான்,  பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இது வெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாக  இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று ர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,   வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியது. அங்கு தீர்வு கிடைக்காத நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. அங்கும் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை ஏற்படாத நிலையில், தற்போது வருமான வரித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் ரூ.1700 கோடி கட்ட வேண்டும் என்று கூறி உள்ளது.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்வோம்  என்றதுடன், “அடுத்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் நாங்கள் மக்களைச் சந்தித்து, எங்கள் கணக்குகளை முடக்குவதற்கு அதிகாரிகளைப் பயன்படுத்தி, தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பாஜக என்ன செய்தது என்பதை அவர்களிடம் கூறப் போகிறோம்,” என்று  தெரிவித்தார்.

பாஜக அரசின் தூண்டுதலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,   இது எங்கள் கட்சிக்கு எதிராக அதிகாரிகள் பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டியவர், “பிஜேபி கூட வரி  ரிட்டன்களை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே வரி பாக்கி  ரூ. 520 கோடி செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸுடன், தற்போது  கூடுதலாக ரூ.1,700 கோடியை வரியாக செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்றும் கூறினார்.