சென்னை:

துக்ளக் விழாவில்  பெரியார் குறித்து ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த வாரம்  சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினி, பெரியார் குறித்தும், முரசொலி தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ரஜினி மீது காவல்துறையில் புகார் கொடுத்தும் உள்ளது. இதற்கிடையில் திராவிடர் கழகம் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..?  என கேள்வி எழுப்பிய நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று கண்டித்ததுடன்,  மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என்று கூறியது.

இதையடுத்து, வழக்கு தொடர்ந்த மனுதாரர் திராவிடர் விடுதலை கழகம் சார்பில்  வழக்கு வாபஸ் பெறப்படுவதாக கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை  உயர்நீதி மன்றம் பெரியார் குறித்து பேசிய ரஜினிக்கு எதிரானமனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.