பிரசல்ஸ்,

ராகுல் காந்தி தனது பெல்ஜிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புக்கள் தாக்கப்படுவதாகக் கூறி உள்ளார்.

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர்  இதில் முதலாவதாக பெல்ஜியம் சென்று தலைநகர் பிரஸ்சல்சில் வாழும் இந்திய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

அப்போது

“இந்தியர்கள் மற்றும் பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல் நடந்தது. அப்போது இந்தியா-ஐரோப்பா இடையேயான உறவு, மாறிவரும் உலகம், இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள், மணிப்பூர் வன்முறை, பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம்.

பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடக்கிறது. நாக்கள் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். சிறுபான்மையினர் தலித் சமூகங்கள், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்ட சமூகங்களும் இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளாகி நாட்டின் தன்மையை மாற்ற முயற்சி நடக்கிறது.

ஜனநாயக அமைப்புகள், ஜனநாயக கட்டமைப்புகள் இந்தியாவில் பாதுகாக்கப்பட வேண்டும், மக்கள் குரல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது காஷ்மீர் உள்பட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பொதுவான விவாதம் ஆகும். நான் சுமார் 4,000 கி.மீ. தொலைவுக்கு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களுடைய சிக்கலான பிரச்சினைகளை அறிய முடிந்தது.

ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. மேலும் காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் அதில் யாரும் தலையிட உரிமை இல்லை.”

என்று ராகுல் காந்தி கூறினார்.