ஐதராபாத்: காங்கிரஸின் விஜயபேரி யாத்திரையின் ஒரு பகுதியாக ஜகித்யாலுக்குச் செல்லும் ராகுல்காந்தி,  தனது பயணத்தின் நடுவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  என்ஏசி பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலையோர கடையில், சுடச்சுட மொறு மொறு என தோசை சுட்டு அசத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு  இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  காங்கிரஸ், பாஜக உள்பட மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக  தீவிர  பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை  பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான  ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டார். அதன்மூலம், நாடு முழுவதும்  146 நாள்கள் குமரி முதல் காஷ்மீர் வரையிலான நாட்டின்  பல்வேறு பகுதிகளுக்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில், தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவித்துள்ளதால், அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ராகுல், தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  தெலங்கானா மாநிலத்தில்,  சட்டமன்ற தேர்தல்  வாக்குப்பதிவு  நவம்பர் 30ம் தேதி  நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியான  முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

அதன் ஒருபகுதியாக,  ராகுல் காந்தி மூன்று  நாள் சுற்றுப் பயணமாக ஐதராபாத் வந்தார்.  நேற்று இரண்டாம் நாளான  அவர், விஜயபேரியில் பேருந்து யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்கே பேருந்தில் இருந்தபடியே பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, யாத்திரையின் நடுவில் விஜயபேரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அன்புடன் வரவேற்று, சிறுவர்களுக்கு சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர், அங்கிருந்த சாலையோர உணவு தள்ளு வண்டி கடையை பார்வையிட்டு அங்கிருப்பவர்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து, அந்த கடையில் தோசை சுட்டு, அங்கிருந்து மக்களுக்கு பரிமாறி தோசை சாப்பிட்டுள்ளார்.

ராகுல்காந்தி தோசை சுடும் வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் தெலங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல்:  ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்!