ஸ்ரீநகர்: இன்று காஷ்மீர் மாநிலத்திற்குள்  நுழையும் ராகுல்காந்திக்கு, முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி  மாநில எல்லையில் பிரமாண்ட ஹோர்டிங் மூலம் வரவேற்றுள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய  ராகுலின் ஒற்றுமை யாத்திரை  பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அவரது யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து  இன்று காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைகிறது.

திட்டமிட்டபடி,  இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ராகுல் காந்தி காஷ்மீர் மாநிலம்  லக்கன்பூருக்கு செல்ல உள்ளார். அங்கே அன்று இரவு தங்கிய பிறகு, மறுநாள் காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து புறப்படுகிறார். மீண்டும் சட்வாலில் இரவு தங்கிவிட்டு, ஜனவரி 21 அன்று காலை ஹிராநகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், ஜனவரி 22 அன்று விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதை தொடர்ந்து, ஜனவரி 25 ஆம் தேதி பனிஹாலில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றுகிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வரகும் ஜனவரி 27 ஆம் தேதி அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்கு செல்கிறார். ஸ்ரீநகரில் 30ந்தேதி ராகுலின் யாத்திரை பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில்,  ராகுல் காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைவரை வரவேற்கும் வகையில்,  முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி ஜம்முவில், விமான நிலையத்திற்கு வெளியே, ஒரு பெரிய விளம்பர பலகை வைத்து, ராகுல் காந்திக்கு வணக்கம் மற்றும் நன்றி தெரிவித்து  வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நாடு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்படும் நேரத்தில் அவர் (ராகுல் காந்தி) அன்பு மற்றும் அமைதியின் செய்தியை கொண்டு வருகிறார் என்று மக்கள் ஜனநாய கட்சியின் தலைவி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்,  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்று, மெகபூபா முப்தியின்  மக்கள் ஜனநாயக கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்துள்ளனர். 

காஷ்மீரில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு காரணமாக, கூட்டத்தை குறைத்துக்கொள்ள மத்தியஅரசு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால்,  பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளீடுகள் எதுவும் இல்லை எனக் கூறி ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு J&K நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய  ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங், ஸ்ரீநகருக்கு கால்நடையாகச் செல்லும் காந்தியுடன் செல்வோரின் கூட்டத்தின்  அளவைக் குறைப்பதற்கான வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது என்றவர், இங்குள்ள சிறிய சாலைகளில்,  ஒரு பெரிய யாத்திரை சென்றால், அது  மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும், ஏனெனில் சாலைகள் தடைபடலாம் என்றவர்,  அதனால் அதை  ஒழுங்குபடுத்துவது சிரமங்களை ஏற்படுத்தலாம். இருந்தாலும்,  “பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இருந்து தேவைப்படும் இடங்களில் வழிகாட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.