இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை தருவதாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துமீறலில் ஈடுபட்டவர்களை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் துவங்கிய இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

பயிற்சிக்கு வரும் வீராங்கனைகள் மற்றும் மாணவிகளிடம் பயிற்சியாளர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய இவர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 15க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதில் சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்டவர்கள் மீது வினேஷ் போகத் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. அல்லது காவல்துறை விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் இதற்காக பதவி விலகப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் ஒருவருக்கொருவர் விடாப்பிடியாக சண்டையிட்டு வரும் நிலையில் சம்மேளன நிர்வாகிகளை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.