சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்தது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA – டி.ஜி.சி.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 10 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ மற்றும் டி.ஜி.சி.ஏ. ஆகியவற்றிடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் தமிழக ஊடகங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இது தொடர்பான விரிவான விசாரணையில் சௌத் பர்ஸ்ட் (South First) என்ற இணைய செய்தி நிறுவனம் இறங்கியது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அதே விமானத்தில் இவர்களுக்கு அருகே பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சக பயணியை தொடர்பு கொண்டுள்ளனர்.

இதில் அவர் அளித்த விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக சௌத் பர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மாண்டஸ் புயலுக்கு மறுநாள் டிசம்பர் 10 ம் தேதி காலை வழக்கத்தை விட 90 நிமிடம் தாமதமாக காலை 10:05 க்கு புறப்பட தயாரான விமானத்தில் கர்நாடகா-வைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்தனர்.

விமானம் ஓடுபாதையில் ஓடத்துவங்கிய நிலையில் விமான ஊழியர்கள் பயணிகளுக்கு அவசர வழி உள்ளிட்ட முக்கிய பயன்பாடுகள் குறித்த அறிவிப்புகளை தெரிவித்தனர்.

அப்போது அருகில் அவசர வழி அருகே அமர்ந்திருந்த தேஜஸ்வி சூர்யா அந்த கதவின் மீது சாய்ந்தபடி கார் கைப்பிடியை இழுப்பது போல் அதன் கைப்பிடியை அழுத்தி திறந்தார் இதில் அவசர வழி திறந்துகொண்டது.

இதனை அடுத்து விமானிக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பேருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவசர வழி திறக்கப்பட்டதால் அதனை சரிசெய்யவும் அதனால் வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்றும் சோதனை நடத்தப்பட்டது.

இதனால் விமானம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது பிறகு மதியம் 12:27 க்கு புறப்பட்ட விமானம் பிற்பகல் 1:23 க்கு திருச்சியை சென்றடைந்தது.

விமான போக்குவரத்து விதிகளின் படி இந்த தவறுக்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கும்படி விமானி அறிவுறுத்தியதை அடுத்து பேருந்தில் அமர்ந்தபடியே தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததோடு விமானப் பயணம் தன்னால் தாமதமானதற்காக சக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று அந்த பயணி சௌத் பர்ஸ்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பாஜக யுவ மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களை கையாள்வது குறித்து இளைஞர்களிடையே பேச சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட டி.ஜி.சி.ஏ. மற்றும் இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த விவரத்தை வெளியிட மருத்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு சக பயணிகளால் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர்.

தவிர அவசர வழிகள் லேசாக கைவைத்தாலே தெரிந்துகொள்ளும் அளவுக்கு மோசமாக பராமரிக்கப்படும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வது குறித்து யோசிக்க வேண்டி இருக்கும் என்றும் விமர்சித்து வருகின்றனர்.