சென்னை:

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் உள்ளது. முக்கிய பண்டிகை நாட்களில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதுண்டு.

இந்நிலையில், தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலுக்குள் அகோரிகள் போன்ற சிலர் சுவாமி தரிசனம் செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. ஆடை அணியாமல் உடல் முழுவதும் திருநீறு பூசிய அகோரி ஒருவரும், அவரைத் தொடர்ந்து காவி வேஷ்டி அணிந்த மற்றொரு அகோரியும் தரிசனம் செய்ததாக அந்தக் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலில் நேற்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என்று தேவஸ்தான நிர்வாகம் திடீரென அறிவித்தது. அகோரிகள் மனித மாமிசம் தின்பவர்கள் என்ற கருத்து உள்ளதால் கோயிலை சுத்தப்படுத்தும் வகையிலும், சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் அதிகாரி சீனிவாசுலு கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த அகோரிகள் காலை 11.50 முதல் 12 மணி வரையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மை தான். ஆனால், அகோரிகள் வருகையால் கோவிலில் சுத்தம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய வில்லை. இன்று (16-ம் தேதி) ஆனி வாரம் அஸ்தானம் வருகிறது. அதற்காகதான் நேற்று (15-ம் தேதி) கோயில் சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஆனி வாரம் அஸ்தானம் என்பது கடந்த ஆண்டு வரவு-செலவு கணக்கை இறைவன் முன்பு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகும். இதேபோல், புதிய ஆண்டு கணக்கு பேரேடு புத்தகம் பெறுவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். அகோரிகள் தரிசனம் செய்தது வீடியோ பரவியதால்தான் வதந்தி பரவியுள்ளது’’ என்றார்.