தைவானைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ. 1,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி கூடங்களை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் காலணி உற்பத்தித் தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல் விளையாட்டு ஆடைகள் மற்றும் காலனி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹாங் ஃபூ நிறுவனம் நைக் மற்றும் ப்யூமா போன்ற பிராண்டுகளின் முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 10 மாதங்களில் ரூ.68,375 கோடி முதலீட்டிற்கான 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது இதன்மூலம் 2,05,802 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்த எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வில், குறைந்த முதலீட்டில் மின்னணு முதலீட்டுக்கு ஏற்ற இடமாக சென்னை இடம்பெற்றிருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.