சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மே 2022 வரை 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வறியவர்களிலும் வறியோரை உயர்த்தும் உணவுத் திட்டத்தின் கீழ், வறியவர்களிலும் வறிய குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தேவையின் அடிப்படையில் அவ்வப்போது விரிவுப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நம் மாநிலத்தில் உள்ள அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 18,64,201 ஆகும். இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு இதர இன்றியமையாப் பொருள்களும் விநியோகிக்கப்படுகின்றன. இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 21.03.2022 வரை 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் சமூகத்துடன் இணைந்த மக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசால், தனிநபராகவோ, குடும்பமாகவோ வசித்து வரும் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு 21.03.2022 வரை 2,429 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.