புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான என்ஆர்காங்கிரஸ் – பாஜகவுக்கு இடையே அதிகாரப்பகிர்வில் சிக்கல் நீடித்த நிலையில், 24 நாட்களுக்கு பிறகு, இன்று அங்கு தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில்,  மே 2ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில்,  என்ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்ற நிலையில்,  அமைச்சரவை பதவி ஏற்காத நிலையும், தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவி பிரமாணம் எடுக்க முடியாத நிலை நீடித்து வந்தது. கடந்த 9-ம் தேதி தற்காலிக பேரவைத் தலைவரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். ஆனால், இந்த நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காததால் பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியவில்லை. இது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இதையடுத்து  புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். அவருக்கு 26ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் கன அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிநாராயணணுக்கு ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்ட பேரவைத் தலைவர் அறையில், 15ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டும் நியமன உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் பதவி பிரமாணம் வைக்கப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து 24 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால்,  பாஜகவின் 3 நியமன எம்எல்ஏ பதவி ஏற்பதில் சிக்கல்  எழுந்துள்ளது.அவர்கள் நியமனத்துக்கு  எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர்கள் பதவி ஏற்பார்களா என்பது குறித்து இதுவரை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…