ந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய அரசியல் வரலாற்றில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் அதிகாரபோதையில் ஏற்பட்டுள்ள  புதிய சாதனையாக (களங்கம்) கருதப்படுகிறது.

புதுச்சேரியில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 30 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும்  வெற்றி பெற்றதால், என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

மாநில முதல்வராக என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த 7ம் தேதி பதவியேற்றார். என்.ஆர்.ரங்கசாமி அமைச்சரவையில், பாஜக இடம்பெறும் என கூறப்பட்டது. அமைச்சரவையில், துணைமுதல்வர் பதவி கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வந்தது.  இதற்கிடையில், முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சர்கள் நியமிப்பதில் சிக்கல்  நீடித்தது.

மே 7ந்தேதி பதவி ஏற்ற அன்று தலைமைச்செயலகம் வந்த முதல்வர் ரங்கசாமி  3 கோப்புகளில் கையெழுத்திட்டுச் சென்றுவிட்டார். அதன்பின் 9-ம் தேதி சட்டப்பேரவைக்கு வந்த ரங்கசாமி, 20 நிமிடம் மட்டும் பணிகளைக் கவனித்துவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்ந சூழ்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பா.ஜ.,வை சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில், தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், பா.ஜ., நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பியும் பா.ஜ. பிரமுகருமான ராமலிங்கம் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக விசாரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

தற்போது கொரோனா குணமடைந்து வீடு திரும்பிய ரங்கசாமி மக்கள் பணிகளை கவனிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், அங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க முடியாத சூழல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அங்கு கவர்னர் தமிழிசையால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னரே ஆட்சி செய்து வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு  சார்பில் முதல்வர் பதவியேற்றும், என்.ஆர்.ரங்கசாமி களத்தில் இறங்கி பணியாற்றாமல் ஒதுக்கி இருப்பதும், சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்காமலும்,  எந்த உறுதியான  அறிவிப்பை வெளியிடாமலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்காமல் இருப்பது புதுவை மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்களாட்சி அதிகாரத்துக்கு வராத நிலையே தொடர்ந்து. மாநிலத்தில் இதுவரை எந்தவொரு அமைச்சரும் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் சட்டமன்றத்தை கூட்டி,  மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்க முடியாத நிலை தொடர்கிறது.

மே 2ந்தேதி தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டு, இன்றோரு 22 நாட்கள் ஆகும்  நிலையில், இதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காததால், அவர்களால், கொரோனா காலக்கட்டத்தில்  முழுமையாக மக்கள் மணியாற்ற முடியாத அவலம் தொடர்ந்து வருகிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே,  இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடைபெற வில்லை என்றும், முதன்முதலாக புதுச்சேரியில்தான் இதுபோன்ற அவலம் உருவாகி, வரலாற்று பிழையை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மூலம் புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. என்.ஆர்.காங்., கட்சியை விட ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே குறைவாக உள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் பாஜக  அரசியல் சதுரங்கத்தை ஆடி வருவதால், அங்கு சட்டச் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.