டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.  பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள் என கர்நாடக காங்கிரஸ் முதல்வர்  சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். அவர்மீது ஏராளமான புகார்கள் குவிந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வழக்குகளை மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்துள்ளது. மேலும் லுக்அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம்  வரும் 7ந்தேதி நடைபெற்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில்,  பிரஜ்வல் ரேவண்ணா  தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளதாக, மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
ராகுல் எழுதியுள்ள கடிதத்தில்,  பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான சமீபத்திய வழக்கு தேசத்தை ஆழமாக கலக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவது நமது சட்ட அமைப்பில் நம்பிக்கையைப் பேணுவதற்கு முக்கியமானது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு  மாநிர அரசு ஆதரவை  வழங்கி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  நியாயமான செயல்முறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று  முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி,  பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதுடன்,  அவர் ஒரு வெகுஜன பலாத்கார குற்றவாளி என்று கூறிய அவர், கர்நாடகாவில் பிரஜ்வாலுக்கு வாக்குகள் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவளிப்பதாக மேலும் குற்றம் சாட்டினார்.  “இது ஒரு எளிய பாலியல் ஊழல் மட்டுமல்ல, இது வெகுஜன பலாத்காரம். பிரஜ்வாலின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்திருந்தும், மோடி மற்றும் [மத்திய உள்துறை அமைச்சர்] அமித் ஷா இருவரும் ஜேடி(எஸ்) உடன் கூட்டணி அமைத்து அவருக்கு ஓட்டுக் கேட்டனர்.  தற்போது, அவர் வெளிநாடு செல்ல பிரதமர் மோடி  ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இதுதான் பாஜகவின் பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பிரியங்கா வத்ரா தனது முகநூல் பதிவில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து பாஜக அரசு பேசுகிறது, ஆனால் அனைத்து தரப்பு பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்த இந்த எம்பி மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். பிரஜ்வலுடன் மோடி மேடையை பகிர்ந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
“பாஜக அரசின் பெண்கள் விரோத முகம் மீண்டும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது… குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி இவ்வளவு எளிதாக வெளிநாட்டிற்குத் தப்பினார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்களா? துன்பப்படும் பெண்களுக்கு எனது அனுதாபங்கள்” என்று  குறிப்பிட்டுள்ளார்.