டெல்லி: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,   சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பொறியாளர்கள் அந்த நாட்டின் சவுதி பொறியாளர்கள் குழுமத்தில் கட்டாய தொழில் முறை அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். முறையான அங்கீகாரம் பெறாதவர்கள் பொறியாளர்களாக பணிபுரிய அனுமதி வழங்கப்படாது என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ளது.

எனவே, சவுதியில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள், தற்போது பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.