லக்னோ

உத்தரப்பிரதேச அரசு ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்குத்  தடை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி இல்லாததை ஹராம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இறைச்சி, உணவு வகைகள், மருந்துப்பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்கள் ஹலால் முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை செய்ய உத்தரப்பிரதேச அரசு தடை வித்துள்ளது.

அரசின் உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டம் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வரும் நிலையில் ஹலால் முத்திரை வழங்கும் நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.  மேலும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து சான்று வழங்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளன.

பல நிறுவனங்கள் போலியான ஹலால் முத்திரையிட்டு அளித்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முயன்றதாகப் புகார்கள் எழுந்தன.  எனவே ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹலால் முத்திரையிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது.