கமதாபாத்

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 

கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்புப்படியே இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இன்று கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் லீக்கில் இருந்து அரையிறுதி வரை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மாவின் (10 ஆட்டத்தில் 62 பவுண்டரி, 28 சிக்சருடன் 550 ரன்) சரவெடியான தொடக்கமும், விராட் கோலி (3 சதம், 5 அரைசதம் உள்பட 711 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (526 ரன்), லோகேஷ் ராகுல் (386 ரன்), சுப்மன் கில் (350 ரன்) ஆகியோரின் ரன்வேட்டையும் இந்தியாவின் வீறுநடைக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி முதல் இரு லீக்கில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் அடிவாங்கியது. அதன் பிறகு எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வென்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்று இருக்கும் ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 6-ஆக உயர்த்த வரிந்துகட்டுகிறது. டிராவிஸ் ஹெட் காயத்தில் இருந்து குணமடைந்து இணைந்த பிறகு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.