கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்துவரையில் இதுவரைக்கும் 6.5 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 4 கோடி பேர் முதல் தவணையும், 2.2 கோடி பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர்.

திரையரங்குகள், மார்கெட், மால்கள், தெருக்கள் போன்ற இடங்களில் கூடும் மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.