டில்லி:

காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இதுவரை கட்சிக்கு வேறு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது.  இதற்கிடையில், பலர்  பிரியங்கா காந்தி கட்சியின் தலைமைப்பதவி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வேறு தலைவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.

பல மூத்த தலைவர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வராத நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே, திக்விஜய் சிங், குமாரிசெல்ஜா, முகுல்வாஸ்னிக், சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய 7 பேரில் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் பரவின.

ஆனால், காந்தி குடும்பத்தினரிடமே தலைமை பொறுப்பு இருக்க வேண்டும் என்று நட்வர்சிங் உள்பட பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில், பிரியங்கா காந்திக்கு தலைமைப்பதவி வழங்க வேண்டும் காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக,  பிரியங்காவை கட்சித் தலை வராகக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத்தொடங்கி உள்ளன.

இதுதொடர்பாக ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், அவர் பிரியங்காவை தீவிர அரசியலுக் குள் இழுக்க வேண்டாம் என்று தடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்திக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ள நிலையில், அவரை கட்சிக்கு தலைவராக்கினால் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறும் என சில நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், தற்போது உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்காவிடம், கட்சியின் தலைவர் பொறுப்பு ஏற்பது குறித்து சில மூத்த தலைவர்கள், விவாதித்ததாகவும், அதற்கு அவர், கட்சி தலைவர் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மறுத்து விட்டதாகவும், இப்போதுள்ள பதவியிலேயே தொடர்ந்து கட்சி பணியாற்ற விரும்புவதாகவும் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ராகுல்காந்தி தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் திரும்பியதும், கட்சியின் தலைவர் பதவி குறித்து விவாதிக்கப்படும் என்றும், ராகுலே தொடர்ந்து கட்சித்தலைவராக நீடிக்கும்படி வலியுறுத்தப்பட உள்ளதாகவும், அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்தால்,  தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப் படும் என்றும் டில்லி காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.