தேஜ்பூர், அசாம்

சாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம் 27 தொடங்கி ஏப்ரல் 6 வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.   இங்கு முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27, இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளன.  பதிவான வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறது.  கடந்த இரண்டு நாட்களாகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி இம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  அவருக்கு அசாம் மாநில மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகிறார்.  பல கூட்டங்களில் அவர் பேசி உள்ளார்.

அவ்வகையில் நேற்று தேஜ்பூரில் அவர் ஒரு பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.  அவர் தனது உரையில், மாதந்தோறும் நாங்கள் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 பணம் வழங்குவோம். தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.365 ஆக உயர்த்தப்படும்.  ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவோம்.

இவை எல்லாம் எங்கள் வாக்குறுதிகள் அல்ல.  உத்திரவாதம் ஆகும்.   காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சிக்கு வரும்போது சிஏஏ செயல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் சட்டம் இயற்றப்படும்.  மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.