நடுத்தர மக்கள் மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களும் சமையல் எரிவாயுவின் விலை விண்ணைத்தாண்டி எப்பொழுது வரும் என்று ஏங்கிக்கொண்டிருக்க.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் அது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருந்தது, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சாமானியருக்கு எந்த சுமையும் ஏற்றாத வகையில் குறைவாகவே உள்ளது என்று கூறி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளராக இருக்கும் சி.டி. ரவி 2011 ம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள விலையை பட்டியலிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பின் தேசிய துணை தலைவர் சந்தோஷ் ரஞ்சன் ராய் உள்ளிட்ட சில பா.ஜ.க. நிர்வாகிகள் இதே பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து இதன் உண்மை தன்மையை அறிய விரும்பிய ஆல்ட் நியூஸ் எனும் இணையதள செய்தி நிறுவனம், இது குறித்து ஆய்வு செய்தது.

இவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில், மானியம் இல்லாத சிலிண்டரின் உயர்ந்த பட்ச விலை என்ன ? மானியம் எவ்வளவு வழங்கப்பட்டது ? மானியம் போக சிலிண்டரின் விலை என்ன ? என்பது குறித்த விவரங்களை அதில் வெளியிட்டுள்ளது.

ஆண்டு  சிலிண்டர் விலை ₹
2011 877
2012 922
2013 1021
2014 1241
2015 606
2016 584
2017 747
2018 609
2019 695
2020 594
2021 719 (பிப்ரவரி 16)

2011 ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த பட்ச விலை என்னவாக இருந்தது என்று இவர்கள் வெளியிட்ட பட்டியலை, இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் உறுதிப்படுத்த முற்பட்டது, அந்த தளத்தில், 2013 டிசம்பர் 11 தேதி முதல் உள்ள விலை விவரங்கள் தான் இருந்தது.

இதை தொடர்ந்து 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளின் விலை விவரங்களை அந்த ஆண்டு வெளிவந்த பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தேட ஆரம்பித்தபோது, 2012 ம் ஆண்டுக்கான விலை இவர்கள் பதிவிட்ட விலையுடன் ஒத்துப்போனது.

2011 ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இந்த விலை 710 ரூபாயாக இருந்ததாக புனே மிரர் செய்தியில் பதிவிடப்பட்டிருந்தது, ஆனால் பா.ஜ.க. வினர் 2011 ம் ஆண்டு ரூ. 877 விற்றதாக பதிவிட்டிருந்தனர், இதன் மூலம் பட்டியலின் முதல் தரவிலேயே தகராறு ஏற்பட்டது.

அதுபோல், 2018 ஆண்டு விலையை பதிவிட்ட இருவருமே ரூ. 609 என்று பதிவிட்டிருந்தனர், ஆனால் அது ரூ. 809 ஆக இருந்திருக்க வேண்டும்.

சிலிண்டர் விலை
ஆண்டு  மானியம் இல்லாமல் ₹ மானியம் போக ₹
2011 710 (ஜூலை 12) 399.26 ((ஜூலை 1)
2012 922 (நவம்பர் 2) 410.42 (நவம்பர் 2)
2013 1021 (டிசம்பர் 11) 410.50 (டிசம்பர் 5)
2014 1241 (ஜனவரி 1) 414 ((ஜனவரி 1)
2015 606 (பிப்ரவரி 1) 452 (பிப்ரவரி 12)
2016 584 (டிசம்பர் 1) 432.17 ((டிசம்பர் 16)
2017 747 (டிசம்பர் 1) 495.64 (ஜனவரி 13, 2018)
2018 809.50 (டிசம்பர் 1) 500.9 ((டிசம்பர் 7)
2019 695 (டிசம்பர் 1) 495.86 (டிசம்பர் 1)
2020 594 (ஜூலை – நவம்பர்) மானியம் இல்லை
2021 719 (பிப்ரவரி 4) மானியம் இல்லை

இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவிட்டிருக்கும் டெல்லியில் விற்கப்படும் விலையை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆல்ட் நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

2020 மே மாதத்திற்கு பின் இங்கு மானியம் வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறியிருக்கிறது. 2021 மார்ச் 1 முதல் டெல்லியில் சிலிண்டர் விலை 891 ரூபாய்க்கும், சென்னையில் 835 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.