ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவர் தனது வீட்டுத் தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடர்கள் சுரங்கம் தோண்டி திருடி உள்ளனர்.

மருத்துவர் சுனித் சோனி என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஆவார்.  சோனி ஜெய்ப்பூரில் தலைமுடி மாற்றும் அழகு சிகிச்சை மையத்தின் உரிமையாளர் ஆவார்.   இவர் தன்னிடம் உள்ள வெள்ளிப் பொருட்களை ஒரு பிரம்மாண்டமான பெட்டியில் வைத்து வீட்டில் தரைக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்துள்ளார்.

ஆனால் சில திருடர்கள் இதை எப்படியோ தெரிந்து கொண்டு மருத்துவர் வீட்டில் பின்னால் உள்ள வீட்டை விலைக்கு வாங்கி உள்ளனர்.  கடந்த ஜனவரி மாதம் ரூ.82 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அந்த வீட்டின் சுற்றுச் சுவர்களைப் பெரிய தகரங்களை வைத்து அடைத்துள்ளனர்.  இதனால் உள்ளே நடப்பது எதுவும் வெளியே தெரியவில்லை.  பிறகு அவர்கள் சுரங்கம் தோண்டத் தொடங்கி உள்ளனர்.

இந்த சுரங்கம் 20 அடி நீளம் மற்றும் 15 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்பட்டு அதன் மூலம் மருத்துவர் வைத்திருந்த வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.    மருத்துவர் வீட்டின் தரைதளம் சமமற்று இருப்பதால் சந்தேகம் அடைந்து சோதிக்கையில் வெள்ளிப் பொருட்கள் களவாடப்பட்டது தெரிய வந்துள்ளது.  உடனடியாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த மருத்துவர் வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்த பெட்டியுடன் மேலும் இரு காலி பெட்டிகளைப் புதைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.   அதற்கான காரணம் என்ன என அவர் தெரிவிக்கவில்லை.  அது மட்டுமின்றி கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்தும் அவர் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மருத்துவர் வெள்ளிப் பொருட்களைப் புதைத்து வைத்ததை அவரது நண்பர் தெரிந்து கொண்டு இருக்கலாம் எனவும் அவர் இந்த கொள்ளையில் பங்கு பெற்றிருக்கலாம் எனவும் காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,.  அவர் ஒரு நகை வியாபாரி ஆவார்.  அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   இந்த கொள்ளையில் தொடர்புள்ள 4 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.