அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை, க்வாட் அமைப்பு மற்றும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடனான கூட்டம் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார்.

நேற்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்த அவர், “கமலா ஹாரிஸ் உலகில் பலருக்கு உந்துசக்தியாக இருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், கொரோனா பரவல் இரண்டாம் அலையில் இந்தியா கலங்கி நின்றபோது உதவிக்கரம் நீட்டிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குறித்து நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த பிரதமர், அவரையும் அவரது கணவரையும் இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார்.

கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பின் போது மோடி அவருக்கு பரிசு ஒன்றை வழங்கினார். இந்த பரிசு என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

இந்தியரான கமலா ஹாரிஸ்-ன் தாய் ஷ்யாமளாவின் தந்தை பி.வி. கோபாலன் இந்திய அரசு பணியில் இணை செயலாளர் அந்தஸ்த்தில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.வி. கோபாலன் 1955 ம் ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் பின் 1966 ம் ஆண்டு மத்திய மறுவாழ்வுத் துறையில் இணை செயலாளராக இடமாற்றம் பெற்றது குறித்தும் வெளியான அரசாணையின் நகலை கைவேலைபாடுடன் கூடிய மரத்தால் ஆன போட்டோ பிரேம் போட்டு பரிசாக அளித்துள்ளார்.

இதே போல், க்வாட் அமைப்பில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களுக்கும் பரிசுப் பொருட்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார்.