டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வென்ற ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் மற்றும் ஒரே தங்கப் பதக்கம் இதுவாகும். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ்க்கு  குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

100 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளத்தில் தங்கம் கிடைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல ஒலிம்பிக்ஸ் தொடரின் தனி நபர் போட்டிகளில் தங்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற போட்டியை கண்ட அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் வெடிவெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். மாநிலஅரசும் பல்வேறு சலுகைகளையும், பரிசுகளையும் அறிவித்து உள்ளது. நீரஜ் சோப்ரா, இந்திய மிலிட்டரியில் பணியாற்றுவதால்,   ஜம்முவில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீரஜ் சோப்ரா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் , பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று இதற்குமுன் இல்லாத வெற்றியை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளதாகவும், தடைகளைத் தகர்த்து வரலாறு படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ”டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா இன்று நடத்திய சாதனை எப்போதும் நினைவுகூரப்படும். இப்போட்டியில் துடிப்பு மிக்க இளைஞரான நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடி தனது திறனைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு தனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க நாள் என்றும், 120ஆண்டுக்காலமாக ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லாத குறை இன்று நீங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே நீரஜ் சோப்ரா தேசிய நாயகன் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…