ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் நோக்கில், முதல்கட்டமாக 60 பிச்சைக்காரர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கி வேலைவாய்பை உருவாக்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு, பிச்சைக்காரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் முயற்சியாக,  ‘கௌரவமான வாழ்வு’ என்ற திட்டத்தை கெலாட் அரசு உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கு அவர்களுக்கு  ஓராண்டு தொழிற்சி பயிற்சி கொடுக்கும் முயற்சியுடன், நிரந்தர வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான முயற்சிகளை,  ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகம் மற்றும் சோபான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரி இணைத்து  செயது வருகிறது.

அதன்படி, முதல்கட்டமாக  60 பிச்சைக்காரர்களுக்கு, ‘கௌரவமான வாழ்வு’ திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அவர்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்துகூறிய ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் நீரஜ் குமார், மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இது மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் கனவுத் திட்டம் எனக் கூறியதுடுன், பிச்சைக்காரர்களுக்கு கவுரவமான வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய இலக்கு  தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு முதலில் மனநலப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதையடுத்து, உழைத்து வாழ்வதன் நோக்கம் என படிப்படியாக அவர்களது மனநிலையை மாற்றி,, கடைசியாக நேரடியாக தொழிற் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

ராஜஸ்தான் அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.