சென்னை:

தமிழகத்தில்,  அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என  ஏற்கனவே தமிழக அரிசு அறிவித்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதுபோல,மற்றும் 1 கோடியே 67 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார். இதன் அடையாளமாக 16 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி முதல்வர் துவக்கி வைத்தார்.

அரிசி  ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக கடந்தை ஆண்டைப்போல, இந்த ஆண்டும்  ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு  வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து, அதற்காக ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கியும் ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், பயனர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி திட்டத்தையும், ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுதிப்பு திட்டத்தின்படி  ரூ.1000 உடன்,  பொங்கல் தொகுப்பாக1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, 2 அடி துண்டு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 67 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கிடும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 16 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.